என்னை பற்றி

அடிப்படையில் நான் இரும்பு கட்டுமான பொறியியல் (Structural Steel Engineering) துறையைச் சேர்ந்தவன். அதனுடன் கணனி நிரலாக்கத்தையும் பணி தொடர்பான தேவைக்காக இணைத்துக்கொண்டவன். பொதுவாக இணையத்தில் தமிழ் வழியில் அறிவியல் மற்றும் நுட்பியல் தகவல்கள் தரும் தளங்கள் எண்ணிக்கை சொல்லும் அளவிற்கு இல்லை. அப்படியே இருந்தாலும் சரியான தமிழ் சொற்களைச் சேர்க்காமல் ஆங்கிலச் சொல் மயமாகவே காணப்படுகிறது. எதாவது ஒரு தகவலாவது குறைந்தபட்சம் 80% தமிழ் வடிவில் கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்காது. பயன்படுத்தும் அனைத்து அறிவியல் சொற்களும் ஆங்கில மாயமாகவே உள்ளது. ஆங்கில மோகத்தில் மூழ்கி கிடக்கும் நமக்கு மொழிவளர்ச்சி பற்றிய அக்கறை கொஞ்சமும் இல்லை என்று உண்மையை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

எண்ணற்ற சிறப்புகளைக் கொண்ட தமிழ், நான் உயிர் கொண்ட கருவறை முதல், வளரும்போதும், பேச்சின் போதும், கல்வியின் போதும், கருத்தை பகிரும்போதும் கூடவே வந்துகொண்டிருக்கும் தமிழ் இன்று பல மொழிகளுக்குக் கீழே இறக்கிவைத்துள்ளதையும், வளமே இல்லாத மொழிகள் எல்லாம் சிம்மாசனத்தில் இருப்பதைப் பார்க்கும் போதும், வயதான தந்தையரை தூக்கி எறியும் மக்கள் போன்று தமிழர்களே தமிழை உன்னால் ஒருபயனும் இல்லை என்று தமிழைத் தூக்கி எறிந்துவிட்டு மற்ற மொழிகளைக் கொண்டாடுவதைக் கண்டு மனதுக்குள் குமுறும் கூட்டத்தில் ஒருவன் நான்.

மனம் குமுறுவதால் என்ன பயன் நடக்கபோகிறது, எதாவது தமிழுக்கு நம்மால் முடிந்த சேவையைச் செய்யவேண்டும் என்று எண்ணம் உதித்தபோது உருவாக்கப்பட்டதே இந்த puthutamilan.blogspot.in என்ற வலைத்தளம். இதில் முழுக்க முழுக்கத் தமிழ் சம்மந்தப்பட்ட கருத்துக்கள், தரமான கலைசொற்கள், செய்திகள், உலகச் செய்திகள், அறிவியல் செய்திகள், நுட்பியல் செய்திகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்படும். குறிப்பாக அறிவியியல் துறை சம்மந்தப்பட்ட தகவல் பாடங்கள் , விளங்க பாடங்கள், செய்முறை பாடங்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் இருந்தது செம்மையான முறையில் தமிழில் மொழிபெயர்த்து அளிப்பதே முதல் பணியாகும். இதற்குத் தடைகல்லாக இருப்பது தமிழ் கலைசொற்கள்.

தமிழில் நிறையக் கலைசொற்களை நிறையத் தமிழ் ஆர்வலர்கள் செய்துவருகின்றனர். இருப்பினும் இல்லாத, பயனில்லாத, பேச்சு வழக்கில் கொண்டு வரமுடியாத கலைசொற்களைத் தவிர்த்து மீதமுள்ள கலைசொற்களின் எண்ணிகையைப் பார்த்தல் பெருமைப்படக் கூடிய அளவுக்கு இல்லை. எனவே முதலில் இருக்கும் தரமான கலைசொற்களைச் சேகரித்து, இல்லாத கலைசொற்களை உருவாக்குவதே சரியான ஒன்று. இதற்காக நான் திரு இராம.கி அவர்களின் (http://valavu.blogspot.in) சொல்லாக்க கலைச்சொற்களை என் தளத்தில் பயன்படுத்துகிறேன். ஒரு அறிவியில் கண்டுபிடிப்பு / கருத்து தொடர்பான சொல் தமிழில் வரவில்லை என்றால், அந்தக் கண்டுபிடிப்பு /கருத்து பற்றிய எண்ணம் தமிழ் பேசும் இனத்தவருக்கு இல்லை என்று தான் பொருள். எனவே இந்தக் கருத்துக்கு நாம் இடம் கொடுக்காமல் இனிமேலாவது செயல்படுவது அவசியம்.

இந்தத் தளத்தில் மற்றத் தளங்களைப் போல் சினிமா செய்திகளோ, நடிகர், நடிகை பற்றிய செய்திகளோ, அரைகுறை படங்களோ போட்டு பார்வையாளர்களின் எண்ணிகையை அதிகபடுத்திக் காண்பிக்கவேண்டும் என்ற தேவையில்லை. அதற்கு நிறையத் தளங்கள் உண்டு. தமிழுக்கு என இதுபோன்ற தளங்கள் மிகவும் குறைவு. நானும் மெத்தபடித்த மேதாவி இல்லை. ஆனால் தேவையான அளவு படித்த ஒரு சராசரி மனிதன்.பொறியியல் துறையில் சுமார் 18 வருட அனுபவம் உள்ளவன். எனது அன்றாடம் அலுவல்களுக்கு இடையே செய்து வரும் இந்தப் பணிக்கு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை, உங்கள் அன்பினும் மேலான கருத்துகளை மட்டும் தான்.

(குறிப்பு : இந்த வலைத்தளத்தில் உள்ள பல கட்டுரைகளில் ஆங்கிலக் கலைச்சொற்கள் பயன்படுத்தபடிருக்கும் , ஏனெனில் தமிழ் சொற்கள் என்று சொல்லப்படும் சொல் தொடர்களைப் போட்டுத் தமிழ் மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச பற்றையும் படிப்பவரிடம் இருந்து பறிக்க விரும்பவில்லை. இந்தச் சொற்கள் வரும்காலங்களில் சிறப்பான கலைச்சொற்கள் கொண்டு நிரப்பப்படும், அதுவரை இப்போது இருப்பது போலவே தொடரும்)

வாழ்க தமிழ்

1 கருத்து:

  1. தங்கள் வலைப்பூவை சிறிது காலத்திற்கு முன்புதான் கண்டுகொண்டோம். அது முதல் தங்கள் பதிவுகளை படித்து என் அறிவை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளொம். குறிப்பாக 'மேகம்' என்ற சொல் பற்றிய பதிவு என்னை மிகவும் தூண்டிவிட்டுள்ளது. நீங்கள் அப்பதிவில் குறிப்பிட்டிருந்த 'கம்' என்ற சொல் நீரையும், வெண்மையையும் குறிக்கும் என்று சொல்லியிருந்தீர்கள். இது போல மேலும் பல சொற்களைப் பற்றிய அறிவை வளர்க்க என்ன செய்ய வேண்டும். எந்தெந்த நூல்களை படிக்கவேண்டும் என்று சொல்லுங்களேன்.

    fb: facebook.com/selvakumar.v2.x
    mail: selva.developer@gmail.com

    பதிலளிநீக்கு

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...